பிரியங்கா காந்தியின் பேரணியை புறக்கணித்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ: தனது முன்னுரிமை மக்களுக்கு தான் என பேட்டி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தலைமையிலான பேரணியை புறக்கணித்த பெண் காங்கிரஸ் எம்எல்ஏ-வால் அம்மாநில  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக  கொண்டாடப்பட்டது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தலைநகர் டெல்லி, லக்னோ, மற்றும் போபாலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம்  மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காந்தி சந்தேஷ்  யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து ராஜ்காட் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதைபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்தில் கட்சியினருடன் பாதயாத்திரை மேற்கொண்டார். அதே சமயம் 36  மணி நேர சிறப்பு சட்டமன்றக்கூட்டத்துக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்திருந்தார். இதை எதிர்க்கட்சிகள்  புறக்கணித்திருந்தன. ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியாகாந்தி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட  ரேபரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அதிதி சிங் பங்கேற்றார்.

காங்கிரஸ் நடத்திய பேரணியில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு சட்டமன்றக் கூட்டத்தில் எம்எல்ஏ அதிதி கலந்துகொண்டது பல்வேறு  விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிதி சிங், கட்சி பாகுபாடையும் தாண்டி தொகுதி  வளர்ச்சியை கருதில் கொண்டே சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

தனது முன்னுரிமை மக்களுக்கு தான் என்றும், தான் சரியாகவே செயல்படுவதாகவும் அதிதி சிங் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியாங்கா காந்தி நடத்திய பாதயாத்திரையில் பங்கேற்காததும் காங்கிரஸ் புறக்கணித்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றத்தும் அவர் பாஜகவில்  சேர்வதை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த  நிலையில் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ அதிதி சிங் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: