சூலூர் விமானப்படை தளத்தில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள் பொதுமக்கள் வியப்பு

சூலூர்: கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நேற்று விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பார்த்து வியந்தனர். இந்திய விமானப்படையின் 87ம் ஆண்டுவிழா வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விமானப்படை சார்பில் இந்தியா முழுவதும் உள்ள விமானப்படை தளங்களில் விமான கண்காட்சி மற்றும் விமானப்படையில் பயன்படுத்தும் பாராசூட், துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு போபாலில் விமான சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானங்களின் கண்காட்சியும்,

விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.தேஜஸ் ரக ராணுவ விமானம், வானில் தலைகீழாக சென்று சாகசம் நிகழ்த்தியது. இதை பள்ளி குழந்தைகள் பார்வையிட்டு வியந்தனர். கண்காட்சியில் தேஜஸ், ஏஎன் 32, எம்ஐ 17, சாரங் மார்க் 1 உள்பட பல்வேறு ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானத்தில் பயன்படுத்தப்படும் நவீனரக இயந்திர துப்பாக்கிகள், ஏவுகணைகள், துப்பாக்கி குண்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன் பயன்பாடு குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: