நானும் உங்களை போன்று சாதாரண மனிதன் தான்; உங்களை பாதிப்பது என்னையும் பாதிக்கிறது: மன் கி பாத்'நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

டெல்லி: புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து ஞாயிற்று கிழமை தோறும்  வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதன்படி, இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கரை தொடர்பு கொண்டு பேசினார். லதா  மங்கேஷ்கரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவரை கவுரவிக்கும் விதமாக உரையாடினார். தொடர்ந்து பேசிய பிரதமர், வரும் நாட்களில் நவராத்திரி, கர்பா, துர்கா பூஜை, துஷேரா, தீபாவளி, சாத் பூஜை  ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த நேரத்தில், பல வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படும் போது, சில வீடுகள் இருளில் இருக்கின்றன. பல வீடுகளில் இனிப்புகள்  தயாரிக்கும் போது, பலர் அதற்காக காத்திருக்கின்றனர்.

பலரது வீடுகளில் அலமாரிகள் நிறைய புது உடைகள் இருக்கும் போது, சிலருக்கு, தங்களது உடலை மறைக்க உடைகள் தேவைப்படுகின்றன. நமது பண்டிகையின் போது, நமது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிரும் போது, இரு மடங்காக  அதிகரிக்கும். நமது வீட்டில் அதிகம் உள்ள பொருட்களை, தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்றார். தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் வந்து துணிகள், இனிப்புகளை சேகரித்து தேவைப்படுபவர்களுக்கு விநியோகம்  செய்கின்றனர். அவர்கள், எந்த புகழுக்கும், பெருமைக்காகவும் அல்லாமல் செயல்படுகின்றனர். இந்த பண்டிகை காலத்தில் அனைவரும் இணைந்து இருளை நீக்குவோம். ஏழைகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்து, நமது மகிழ்ச்சியை  அதிகரிப்போம் என்றார்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, கடவுள் லட்சுமியை புதிய வழியில் வரவேற்போம். இந்த ஆண்டு, நமது மகள்களை பெருமை சேர்க்கும் வகையில், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். சாதனை படைத்த பெண்களை கவுரவிக்க  வேண்டும். அவர்களின் திறமை, வலிமையை நாரிசக்தி என்ற பெயரில் கொண்டாடுவோம். பெண்களின் சாதனைகளை சமூக வலைதளங்களில் #bharatkilaxmi என்ற ஹேஸ்டேக்கில் பதிவிடுவோம் என்று தெரிவித்தார்.

தேர்வு அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும். தேர்வு குறித்த தங்களது அனுபவங்களை மாணவர்கள் எனக்கு எழுதலாம். இதன் அடிப்படையில், எக்சாம் வாரியர் புத்தகத்தின் அடுத்த பதிப்பை எழுதுவேன். இந்த புத்தகம் பல  மாணவர்களுக்கு உதவியது. இந்த நாட்டின் பிரதமரின் கடுமையான உழைப்பை பொது மக்கள் பார்த்துள்ளனர். அதனை பற்றி விவாதித்துள்ளீர்கள். நானும் உங்களை போன்று சாதாரண மனிதன் தான். உங்களை பாதிப்பது என்னையும்  பாதிக்கிறது. உங்களில் இருந்து தான் நான் வந்துள்ளேன். நமது முன்னோர்களின் அறிவுத்திறன் அனைவராலும் பாராட்டக்கூடியது. மனித நேயத்துடன் செயல்படும் எந்த நபராலும், யாரின் மனதையும் வெல்ல முடியும் என சாஸ்திரங்கள்  கூறுகின்றன.

புகையிலை பொருட்களுக்கு அடிமையாவது உடல்ந லத்திற்கு தீங்கானது. இதில் இருந்து மீள்வது கடினம். இதனை, பயன்படுத்துவதை தவிர்த்து உடல் நலத்தை பேண வேண்டும். புகையிலை பயன்படுத்துவதால், ரத்த அழுத்தம், சர்க்கரை,  புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், இ - சிகரெட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தாது என பலர் நம்புகின்றனர். ஆனால், சுவாச பிரச்னை, இதய கோளாறு, நரம்பியல் கோளாறு,  மரபியல் ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பொது மக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், மத்திய அரசு தடை செய்துள்ளது. அனைவரும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும். பிட் இந்தியா  என்பது உடற்பயிற்சி கூடத்திற்கு மட்டும் செல்வது கிடையாது. பிட் மற்றும் ஆரோக்கிய இந்தியாவை உருவாக்க அனைவரும் உழைப்போம். மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை  முற்றிலும் தவிர்ப்போம். பிளாஸ்டிக்கை ஒழிக்க 130 கோடி மக்களும் உறுதி ஏற்றுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Related Stories: