பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் 10,000 எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி: அதிகாரிகள் மீது போலீசில் புகார்

மும்பை: மும்பையை தலைமையிடமாக கொண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரை அடுத்து ரிசர்வ் வங்கி பி.எம்.சி. வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளையும் 6 மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டீசில் கடந்த திங்கட்கிழமை முதல் 6 மாதத்துக்கு வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ₹1,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், அதில் கணக்கு வைத்துள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் உச்சவரம்பை 10,000 ஆக ரிசர்வ் வங்கி நேற்று உயர்த்தியது.இதற்கிடையே, வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் வங்கியின் சேர்மன் மற்றும் இயக்குனர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளனர். வாடிக்கையாளர்களின் தூதுக்குழு ஒன்று நேற்று சயான் காவல் நிலையம் சென்று புகார் அளித்தது. வங்கியின் சேர்மன் மற்றும் இயக்குனர்கள் உட்பட குறைந்தது 14 பேர் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்தை கையாடல் செய்து விட்டதாக அந்த புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். புகாரை பரிசீலித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Related Stories: