முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வருடன் எடப்பாடி இன்று சந்திப்பு : திருவனந்தபுரத்தில் மாலை 3 மணிக்கு கூட்டம்

சென்னை: முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவனந்தபுரம் சென்று சந்தித்து பேசுகிறார். தமிழகம்-கேரளா இடையே முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட பிரச்னைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வரை இன்று நேரில் சந்திக்க உள்ளார்.  இதற்காக இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் செல்கிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தையில் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உள்ளனர்.  பரம்பிகுளம் - ஆழியாறு திட்டம், ஆனைமலை - பாண்டியாறு - புன்னம்புழா இணைப்பு திட்டம் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

நதிநீர் பிரச்னைகள் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஏற்கனவே இரு மாநில முதலமைச்சர்களும் சென்னையில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அதில் அப்போது சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இந்த முறை இரண்டாவது முறையாக சந்திப்பு நடைபெறவுள்ளது. அதில், பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது, முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியை பொறுத்தவரை தனது ஆட்சி காலத்தில் இந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டால், தனது பெயரை தமிழக அரசியல் வரலாற்றில் நிலைநிறுத்தலாம் என்பதால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கேரள முதல்வரை சந்தித்து பேசிவிட்டு, இன்று இரவே முதல்வர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

Related Stories: