பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராக கல்யாண் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சர்ச்சைக்குரிய இந்த இடம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ கடந்த 9ம் தேதி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேச முதல்வராக கல்யாண் சிங் இருந்தார். இந்த வழக்கில் அவர் மீது கடந்த 1993ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு அவரிடம் விசாரணை நடத்தவும் முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் மாநில ஆளுநராக இருந்ததால், அரசியலமைப்பு சட்டத்தின்படி அவருக்கு விலக்கு அளிக்க சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது. தற்போது, அவரது பதவிக்காலம் இந்த மாதம் முதல் வாரத்துடன் முடிந்து விட்டது. எனவே, அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நேற்று முன்தினம் சிறப்பு நீதிபதி எஸ்கே.யாதவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, கல்யாண் சிங்கை வரும் 27ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

 கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த 9ம் தேதி முதல் மீண்டும் பாஜ.வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: