தமிழக பொதுப்பணித்துறையில் செயல்படாத ஸ்வர்மா பிரிவுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் செயல்பாட்டில் இல்லாத  ஸ்வர்மா பிரிவுக்கு ஆண்டுதோறும் ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவின் அங்கமான மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமை கடந்த 2013ல் தொடங்கப்பட்டது. இந்த முகமையில் இயக்குனர் ஒருவர், அவருக்கு கீழ் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் என 10 பேர் மற்றும் அவுட்சோர்சிங் அடிப்படையில் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது செயற்பொறியாளர், உதவி பொறியளர்கள் என யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும், இயக்குனர், உதவி செயற்பொறியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த முகமை சார்பில் பொறியாளர்களை நியமிக்க கோரி பொதுப்பணித்துறை தலைமைக்கு அறிவுறுத்தியும் தற்போது வரை யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக எந்த பணிகளும் இந்த முகமை மூலம் நடக்கவில்லை.

அதே நேரத்தில் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மட்டும் அலுவலகத்துக்கு வந்து சென்று வருகின்றனர். அவர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே அலுவலத்துக்கு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த முகமைக்கு மட்டும் ஆண்டுக்கு ₹10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு ஊழியர்களின் ஊதியத்தை தவிர்த்து மற்ற செலவுகளுக்கு அந்த நிதி செலவழிக்கப்படுகிறது. இந்த நிலையில், எந்தவொரு பணியும் நடைபெறாத நிலையில் தொடர்ந்து அரசுக்கு இந்த பிரிவு மூலம் வீண் செலவு தான் என்று பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, ‘₹4 ஆயிரம் கோடியில் உலக வங்கியின் நிதியில் பணிகள் நடைபெறுவதால், அந்த வங்கியின் கட்டாயத்தில் தான் இந்த முகமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த முகமை செயல்பாட்டாலும் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வேலை கூட நடக்கவில்லை. வங்கியில் வாங்கிய கடனை வைத்து பெயரளவுக்கு இந்த முகமை நடத்தப்படுகிறது. அப்படி நடப்பதால் வீண் செலவு தான் ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தகுதியான பொறியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த முகமை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: