கொள்ளிடம், தைக்காலில் ஜிஎஸ்டியால் நலிவடைந்து வரும் பிரம்பு தொழில் காப்பாற்றப்படுமா?

*தனி வாரியம் அமைக்க கோரிக்கை

கொள்ளிடம் : ஜிஎஸ்டி வரி விதிப்பால் கொள்ளிடம், தைகாலில் நலிவடைந்து வரும் பிரம்பு தொழில் காப்பற்ற தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தள்ளனர்.பிரம்பு என்ற பெயரை கேட்டவுடன் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கையில் இருக்கும் பிரம்பு தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அந்த பிரம்பு பற்றி தெரியாத பல தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம். சங்க இலக்கியங்களில் சூரல், வேத்திரத்தால் ஆதி பிரப்பம் என்ற என்ற பெயர்களில் பிரம்பு பயன்பாடு பற்றி கூறப்படுகிறது. கபிலருடைய குறிஞ்சி திணை பாடல்களில் பிரம்பு பற்றி அதிகமாக காண முடிகிறது.

பிரம்பு இந்தியா மட்டுமின்றி இந்தோனிஷியா, மலேசியா, சீனா, மியான்மர், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் மழைக்காடுகள், ஆற்றுப்படுக்கையிலும் தாமாகவே வளர்கிறது. பிரம்பு பொருட்களை பொறுத்தவரை சீனா, மியான்மர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கலை நயமுள்ள பிரம்பு கலைப்பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பர்னிச்சர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மியான்மரில் படகு வீடுகள் கட்டுவதற்கும், பல்வேறு நாடுகளில் அணு உலைகளிலும் பிரம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அந்தமான், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம், கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் சில பகுதிகளிலும் பிரம்பு விளைகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் குடிசைத் தொழிலாக பிரம்பு கூடைகள், கலைப்பொருட்கள், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இருந்தாலும், நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள கொள்ளிடம் தைக்கால் பகுதியில் இத்தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. இப்பகுதியில் கோரைப்பாய் உற்பத்தியும் பிரம்பு கலைப்பொருட்கள் உற்பத்தியும் கடந்த நூற்றாண்டுகளுக்கு மேலாக குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது இத்தொழில் இப்பகுதியில் நேரடியாக 3 ஆயிரம் குடும்பங்களும் மறைமுகமாக 2 ஆயிரம் குடும்பங்களும் ஈடுப்பட்டு வருகின்றது.

தமிழகத்திலேயே இந்த பகுதியில் மட்டுமே மிகக் குறைந்த விலையில் பிரம்பு கலைப் பொருட்களை வாங்க முடிகிறது. குழந்தைகள் ஊஞ்சலாடும் தொட்டில் முதல் சோபா செட் ஊஞ்சல், நாற்காலிகள், கட்டில், டைனிங் டேபிள் பேன்ற கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பகுதியில் குழந்தைகள் ஆடும் தொட்டில் முதல் இஸ்லாமியர்கள் இறந்தவர்களை சுமந்து செல்லும் சவப்பெட்டி வரை அனைத்துமே பிரம்பினால் தரமாக செய்து தரப்படுகிறது.

இதுகுறித்து பிரம்பு கலைப்பொருட்கள் மற்றும் தர்பைப்புல் பாய் தயாரித்து விற்பனை செய்து வரும் பக்கீர்முகம்மது கூறுகையில், எங்கள் பகுதியில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெரும் இத்தொழிலில் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் பிரம்பு மற்றும் பாய் மூலப்பொருட்களான பிரம்பு, ஆணி, வார்னீஷ், பெயிண்ட், நூல், சாயம் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்துவிட்டன.

எனவே பிரம்பு மற்றும் பாய் பொருட்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் எனவும் பிரம்பு பயிர் செய்ய வாய்ப்பு உள்ள பொருள் என்பதல் பிரம்பு சாகுபடி பயிற்சியை வேளாண்மை துறை முலம் அளிக்க வேண்டும என்றும் பிரம்பு தொழிலாளர்களுக்கு அரசு தனி வாரியம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

வங்கி கடன் வழங்க வேண்டும்

இது பற்றி கொள்ளிடம் தைக்கால் வியாபாரிகள் சங்க தலைவர் முகம்மது முஸ்தபா கூறுகையில், வியாபார தலமான எங்கள் பகுதியில் தொலைதூர விரைவுப்பேருந்துகள் தவிர்த்து பிற பேருந்துகள் நின்று செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பிரம்பு தொழிலில் இடைத்தரகர்கள் முறையை ஓழிக்க அரசே பிரம்பு கொள்முதல் செய்து பிரம்பு தொழில் செய்பவர்களுக்கு மானிய விலையில் வழங்குவதோடு வங்கி கடன் உள்ளிட்ட உதவிகளை செய்து நலிவடைந்து வரும் இந்த தொழிலை காக்க வேண்டும் என்றார்.

Related Stories: