நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் எல்ஐசி பணத்தை முதலீடு செய்வதா? : பிரியங்கா காந்தி கண்டிப்பு

புதுடெல்லி: ‘எல்ஐசி.யின் பணத்தை, நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் அரசு முதலீடு செய்கிறது,’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து தனது கருத்துகளையும், விமர்சனங்களையும் நாள்தோறும் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றார். நேற்று அவர், எல்ஐசி.யின் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்படுவது குறித்து மத்திய அரசை கண்டித்துள்ளார். எல்ஐசி நிறுவனம் கடந்த இரண்டரை மாதங்களில் ரூ.57 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக வெளியாகி உள்ள ஊடக செய்தியை, பிரியங்கா காந்தி நேற்று தனது டிவிட்டரில் இணைத்து பதிவிட்டுள்ளார். இதில் அவர், ‘இந்தியாவில் எல்ஐசி என்பது நம்பிக்கையின் மறுபெயராக உள்ளது.

எதிர்கால பாதுகாப்புக்காக சாதாரண மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை எல்ஐசி.யில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், பாஜ அரசோ எல்ஐசி.யின் பணத்தை நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலீடு  செய்கிறது. மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது. இது எந்த மாதிரியான கொள்கை? இது, நஷ்டம் ஏற்படுத்தும் கொள்கையாக மட்டுமே மாறிவிட்டது,’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே பிரச்னை குறித்து காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசு மக்கள் பணத்தை நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், பொது பணத்ைத தியாகம் செய்கிறது. எல்ஐசி.யை தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது,’ என குற்றம்சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: