போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காட்டுமிராண்டிகள் : மத்திய அமைச்சர் சுப்ரியோ ஆவேசம்

கொல்கத்தா: ‘மேற்கு வங்கம் பல்கலைக் கழகத்தில் எனக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் காட்டுமிராண்டிகள், குண்டர்கள்,’ என்று மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ்.சின் மாணவர் பிரிவான ‘அகில பாரதிய வித்யார்தி பரிஷத்‘ சார்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில்  பங்கேற்க, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ சென்றார். அப்போது, நுழைவு வாயிலில் அவரை எதிர்த்து, வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவருடைய தலைமுடியை பிடித்து இழுத்தும், அவரை தள்ளிவிட்டும் மாணவர்கள் மோசமாக நடந்து கொண்டனர்.  இது குறித்து அம்மாநில ஆளுநர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களை அமைச்சர் பாபுல் சுப்ரியோ நேற்று தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், ‘எனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காட்டுமிராண்டிகள், குண்டர்கள். ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திற்கு இவர்கள் அவப்பெயர் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. நீங்கள் விரைவில் எங்களால் அடையாளம் காணப்படுவீர்கள். ஆனால், பயப்படாதீர்கள். நீங்கள் எங்களை நடத்தியது போல், நாங்கள் உங்களிடம் நடந்து கொள்ள மாட்டோம். நீங்கள் மாணவர்களாக நடந்து கொள்ளும் அளவுக்கு மனரீதியாக உங்களை நாங்கள் மாற்றுவோம்,’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் தனது தலைமுடியை பிடித்து இழுக்கும் ஒரு மாணவரை வட்டமிட்டு காட்டியுள்ள அமைச்சர் பாபுல் சுப்ரியோ, ‘பல்கலைக்கழகத்தில் என்னை தாக்கியது இந்த மாணவர். தான். நாங்கள் அவரை கண்டுபிடிப்போம்,’ என அடையாளம் காட்டியுள்ளார்.

Related Stories: