மனித கழிவை அள்ளுவதால் மாதம்தோறும் 5 பேர் பலி: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி:  எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணையின்றி உடனடியாக கைது செய்யும் நடைமுறை தொடர்பாக கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு வழக்கு  தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்ஆர் ஷா, பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில்  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் கே.வேணுகோபாலிடம்  நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் `கையால் மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்காதது ஏன்? ஒவ்வாரு மாதமும் சாக்கடை கழிவு நீரை அகற்றுதல் மற்றும் செப்டிக் டேங்கில் உள்ள மனித  கழிவுகளை சுத்தம் செய்யும்போதும் பாதுகாப்பு கருவிகள் அணியாததால் மாதம் 5 தொழிலாளர்கள்  உயிரிழக்கின்றனர். அனைத்து மனிதர்களும்  சமம் என்று நமது அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால், கழிவுகளை சுத்தம் செய்யும்  தொழிலாளர்களுக்கு சம்மந்தப்பட்ட நிர்வாகம் அதற்குரிய வசதிகளை செய்து தருவதில்லையே ஏன்? கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஆட்களை உள்ளே அனுப்பி விஷவாயு தாக்கி இறப்பது உலகில் வேறு எங்கும்  நடைபெறவில்லை,’’ என்றனர்.

இதற்கு  பதில் அளித்த கே.கே.வேணுகோபால், ‘‘சாக்கடைகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. சுத்தப்படுத்தும் பணியை கண்காணிப்பவர் அல்லது சுத்தம் செய்ய வற்புறுத்துபவரே இதற்கு  பொறுப்பானவர்,’’ என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தீண்டாமையை ஒழிக்க சட்டம் இருந்தாலும், மனித கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் நீங்கள் கைலுக்குவீர்களா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். சாதி  அடிப்படையிலான பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: