காரைக்குடி நகர் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் தாராளம்

காரைக்குடி: காரைக்குடி நகர் பகுதியில் உள்ள தரைக்கடைகளில் கள்ளநோட்டு கும்பல் நோட்டுகளை மாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி நகர் பகுதியில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் குடியேறி வருகின்றனர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் இங்கு அதிகளவில் குடியேறி உள்ளனர். தவிர ஆன்மீகம் மற்றும் பராம்பரிய பங்களாக்களை பார்வையிட தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பெரிய வணிக நிறுவனங்களுக்கு இணையாக சாலையோரை சிறிய கடைகளும் அதிகளவில் உள்ளது. இந்த சிறிய கடைகளை குறிவைத்து கள்ளநோட்டு கும்பல் அவ்வப்போது முகாமிட்டு தங்களிடம் உள்ள கள்ளநோட்டுகளை மாற்றி வருவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குன்றக்குடியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பல லட்சம் ஜெராக்ஸ் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிலரை கைது செய்தனர். தற்போது மீண்டும் கள்ளநோட்டு புழக்கம் நகர் பகுதியில் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர். செக்காலை ரோடு மற்றும் பெரியார் சிலை முதல் பஸ்ஸ்டாண்டு வரை செல்லும் சாலையில் உள்ள சாலையோர கடைகளில் நேற்று பழம் வாங்க வந்த இரண்டு நபர்கள் ரூ.500 கொடுத்து பொருளை வாங்கி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் கொடுத்த நோட்டை வேறு ஒரு வாடிக்கையாளரிடம் கொடுத்த போது தான் அது கள்ளநோட்டு என்பதே தெரியவந்துள்ளது. இதேபோல் அப்பகுதியில் இருந்த பல்வேறு கடைகளில் மாற்றி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே இக்கும்பல் இங்குள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி தங்களிடம் உள்ள கள்ள நோட்டுகளை மாற்றி வருவதாக தெரிகிறது. போலீசார் விரைந்து செயல்பட்டு இக்கும்பலை கைது செய்ய வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: