எஸ்சி, எஸ்டி வழக்கு தீர்ப்பு மறுபரிசீலனை சீராய்வு மனுவை விசாரிக்க 3 நீதிபதி அமர்வு நியமனம்

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உச்ச நீதிமன்றம்  நியமித்துள்ளது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகார்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபரை விசாரணையின்றி கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களுக்கு ஜாமீன் மறுக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்கள் வெடித்தது.

இதையடுத்து, இந்த சட்டப்பிரிவுகளை  மீண்டும் வன்கொடுமை சட்டத்தில் இணைப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஆகஸ்ட் 9ம் தேதி நிறைவேற்றியது. மேலும், தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு சீராய்வு மனு  தாக்கல் செய்தது. இதை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு மாற்றுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இந்த வழக்கை விசாரிப்பதற்கான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் நேற்று நியமித்தது. இந்த அமர்வில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்க முன், நீதிபதிகள்  அருண் மிஸ்ரா, யு.யு. லலித் மட்டும் இந்த வழக்கை விசாரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: