ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: தமிழகம் உள்பட 6 மாநிலங்கள், அரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட 11 ரயில் நிலையங்கள், 6 கோயில்களுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நீடிக்கிறது. பாகிஸ்தான் அரசின் உதவியுடன் தீவிரவாதிகள் எல்லைப் பகுதிகளில் ஊடுருவி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த தூண்டப்படுகின்றனர். இந்நிலையில், அரியானா மாநிலம் ரோஹ்தக் ரயில்வே காவல் நிலையத்துக்கு தபாலில் கடிதம் ஒன்று வந்தது. இந்தியில் எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தை கராச்சியில் இருந்து மசூத் என்பவர் அனுப்பி உள்ளார். இது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாத் எழுதிய கடிதமாக இருக்கலாமென்று போலீசார் கருதுகின்றனர்.

அக்கடிதத்தில், ரேவாரி ரயில் நிலையத்தை வரும் அக்டோபர் 8ம் தேதி தகர்க்க உள்ளதாகவும், தமிழகத்தின் தலைநகர் சென்னை, கர்நாடக தலைநகர் பெங்களூரு, மத்தியப் பிரதேச தலைநகர் போபால் உள்ளிட்டவற்றில் 11 ரயில் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, குஜராத், மபி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 6 முக்கிய கோயில்களின் பெயரை குறிப்பிட்டு அவற்றுக்கு வெடிகுண்டு வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கும்நிலையில் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மற்றும் ராணுவத்தினருக்கு மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்திய கடற்படை மீது தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றை முறியடிக்க இந்திய கடற்படை தயாராக இருப்பதாகவும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்திய கடற்படை மீது தாக்குதல் நடத்துவதற்காக ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு ஆழ்கடல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதாகவும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்திருப்பதாக தெற்கு கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: