அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது: தலைமை தேர்தல் கமிஷனர் இன்று மும்பை வருகிறார்

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகிறது. 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக் காலம் நவம்பர் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய சட்டப்பேரவையை அமைக்க வேண்டும். இதனையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்று மும்பை வருகிறார்கள். தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா இன்று மாலை மும்பை வருகிறார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோரும் வருகிறார்கள். அவர்கள் சிவில் நிர்வாகம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து தேர்தலுக்கான ஆயத்த நிலை குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இன்றும் நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதனையடுத்து தலைமை தேர்தல் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை மாலையில் டெல்லி திரும்புகிறார்கள். மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த அறிவிப்பை தேர்தல் கமிஷன் அடுத்த சில நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மகாராஷ்டிராவில் தற்போது பாஜ தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான தீவிர முயற்சியில் பாஜ ஈடுபட்டு வருகிறது. இதற்காக சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories: