தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி

சிவகங்கை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார். தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன.

இது தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டது. நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டதால் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தலைக்கவசம் தொடர்பான அபராதத்தை குறைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: