மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட மாட்டு வண்டியை ரூ.2,100க்கு ஏலம் கேட்ட மத்திய அமைச்சர்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட மரத்திலான மாட்டு வண்டியை மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் ரூ.2100க்கு ஏலம் கேட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படி, பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்ட 2700 பொருட்களுக்கான ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் பங்கேற்று முதல் நபராக ஏலத் தொகையை கூறினார். மரத்தினால் செய்யப்பட்ட சிறிய மாட்டுவண்டியை அவர் ஏலம் கேட்டுள்ளார். இதன் அடிப்படை விலை ரூ.1000. அமைச்சர் பிரகலாத் இதனை 2,100 ரூபாய்க்கு ஏலம் கேட்டுள்ளார்.

வருகிற அக்டோபர் 3ம் தேதி இணையதள ஏலம் முடிந்த பின்னரே பரிசு பொருள் அமைச்சர் பிரகலாத்துக்கு கிடைக்குமா என்பது தெரியவரும். அமைச்சரை விட அதிக விலைக்கு யாராவது இதனை ஏலம் கேட்டிருந்தால் அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படும். இந்த பரிசை யார் பிரதமர் மோடிக்கு வழங்கியது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட 576 சால்வைகள், 964 அங்கவஸ்திரங்கள், 88 தலைப்பாகைகள், பசு பொம்மைகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.

Related Stories: