திருமுல்லைவாயல், பாடி பகுதியில் வங்கி, ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் பிடிபட்டார்

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் ‘ஆந்திரா வங்கி’’ கிளை உள்ளது. கடந்த 27ம் தேதி மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். பின்னர், மறுநாள் காலை ஊழியர்கள் வங்கியை திறக்க வந்தனர். அப்போது வங்கியின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், வங்கியின் முன் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதோடு மட்டுமல்லாமல், வங்கியின் லாக்கர் உடைக்க முயற்சி நடந்ததும் தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருமுல்லைவாயல் பகுதிகளில் உள்ள 32 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமராவில் வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரின் உருவம் பதிந்து இருந்தது தெரியவந்தது. இந்த கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், சென்னை, சிட்லபாக்கம்,  திரு.வி.கநகர், இளங்கோ தெருவை சேர்ந்த டெல்லிபாபு என்ற ராஜா (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து டெல்லிபாபுவை நேற்று முன்தினம்  போலீசார் பிடித்தனர். விசாரணையில், திருமுல்லைவாயலில் உள்ள ஆந்திரா வங்கி மற்றும் பாடி- முகப்பேர் சாலையில் உள்ள ஏடிஎம் மையம் ஆகியவற்றை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கொடுத்த தகவலின்படி 2 சவரன் நகைகள், விலை உயர்ந்த செல்போன், ரூ.2400 ரொக்கப்பணம் மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், டெல்லிபாபு மீது சென்னை பகுதிகளான ராஜமங்கலம், சிட்லபாக்கம், மாதவரம் மணலி நியூ டவுன், திருநின்றவூர் மற்றும் வேலூர் ஆகிய பகுதியில் குற்ற வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: