வெளிநாடு பயணத்தின்போது பொறுப்புகளை ஒப்படைக்காததற்கு முதல்வரின் பயமே காரணம்: டிடிவி.தினகரன் பேட்டி

திண்டுக்கல்: வெளிநாடு பயணம் சென்ற முதல்வர், பயத்தின் காரணமாகவே யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றுள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். திண்டுக்கல்லுக்கு நேற்று வந்த அமமுக  பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி: ஆளும்கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக உள்ளது. ஆட்சி இருப்பதால் அதிமுக மூட்டை போல உள்ளது. அவிழ்த்து விட்டால் தான் அது நெல்லிக்காய் மூட்டையா என தெரியும்.  தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தின்போது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றது அவரது பயத்தினால்தான். அவரது கட்சியினர் மீது அவருக்கு நம்பிக்கை கிடையாது. அமமுக கட்சியை பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி  செய்து வருகிறோம். அப்படி ஒரே சின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தில் அரசாங்கத்தை மீறி காவல்துறை தனது பணியை செய்ய வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். ஓபிஎஸ் அணி - இபிஎஸ் அணி உள்ளங்களால் இணையவில்லை. அதனால்தான்  திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டுறவு தேர்தலில் ஒரே கட்சியில் இரு அணிகளாக போட்டியிடுகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில்தான் குடிமராமத்து பணியை செய்திருக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட பின்பு குடிமராமத்து  பணி நடப்பது சாத்தியமில்லாதது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: