உ.பி. பள்ளியில் மாணவர்களுக்கு அட்டூழியம் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பை கொடுத்த ஊழியர்கள்: இப்படியும் ஒரு ஊழல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டாக மாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்தியும் உப்பும் வழங்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் அருகேயுள்ள ஹினோதா கிராமத்தில் சியூர் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவாக சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பான  வீடியோ கடந்த 22ம் தேதி சமூக வலைதளங்களிலும், மறுநாள் உள்ளூர் ெதாலைக்காட்சியிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 ஆண்டாக இந்த பள்ளியில் சப்பாத்தியும் உப்புமே மதிய உணவாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலை மாறாது  என பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் வீடியோ வெளியாகி உண்மையை அறிய செய்துவிட்டது.

இது தொடர்பாக மதிய உணவு திட்டத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் படைத்த மாவட்ட கலெக்டர் அனுராக் படேல் ஆசிரியர்களை குற்றம்சாட்டி கூறுகையில், `‘ஆசிரியர்களின் தவறான நிர்வாகம் காரணமாகவே இத்தகைய முறைகேடு  நடந்துள்ளது’’ என்று தெரிவித்தார். இந்த முறைகேடு குறித்து மாவட்ட தொடக்க கல்வி அதிகரி பிரவீன் குமார் திவாரி கூறுகையில், `‘இந்த முறைகேடு எப்படி நடந்தது என விசாரித்து வருகிறோம்’’ என்றார்.இந்த விவகாரம் தொடர்பாக கல்வி அதிகாரி திவாரி விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்த பொறுப்பு தலைமை ஆசிரியர் முராரி லால் உதவி தொடக்க  கல்வி அதிகாரி பிரிஜேந்திர சிங் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: