68வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: விஜயகாந்த் வழங்கினார்

சென்னை: 68வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கினார்.தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றார். இதன்படி இன்று அவர் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். மேலும் ஏழை,  எளியோருக்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ₹50 ஆயிரம் நிதியுதவியையும் அவர் வழங்கினார். அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்  பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒரு  கோடியே 50 லட்சம் செலவில் வழங்கப்பட்டது. இவற்றை மாவட்ட செயலாளர்களிடம்   விஜயகாந்த் வழங்கினார்.

Advertising
Advertising

விழாவில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: பிறந்தநாளை கேக் வெட்டி நட்சத்திர விடுதியில் கொண்டாடும் நிலையில், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை கொண்டு வந்தவர் விஜயகாந்த். குடிநீர் பிரச்னையை நாம்  எதிர்கொண்டோம்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து ஆரம்பசுகாதார நிலையத்துக்கும் ஆர்ஓ வாட்டர் கிடைக்க இயந்திரம் கொடுக்கப்படுகிறது. அமேசான் காடுகள் எரிகிறது என்ற தகவல் உள்ளது. தேமுதிக சார்பில் மரம் நடுதலை வலியுறுத்தி  செயல்படுவோம். அனைவரும் மரங்களை இயன்றளவு நட வேண்டும். மழைநீரை சேமிக்கவேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குளங்களை தூர்வார உள்ளோம். சாலிகிராமத்தில் சாலைகளை சரிசெய்தோம். அரசு செயல்படவில்லையா என  கேட்டார்கள். அதற்கு அப்படி அர்த்தமில்லை. மக்களாகிய நாமும் பகுதி பிரச்னைகளை முன்வந்து செய்யவேண்டும். தேமுதிக சார்பில் செப்டம்பர் 15ல் திருப்பூரில் முப்பெரும் விழா நடக்கிறது. அதில் விஜயகாந்த் கலந்துகொள்வார்’’ என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.

கீழே விழுந்த விஜயகாந்த்

சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளியில் இருந்து  வந்திருந்த 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்து பூங்கொத்து கொடுத்தனர். அவர்களுக்கு இனிப்பு  வழங்குவதற்காக  விஜயகாந்த் எழுந்தார். அப்போது அவர் கால் தவறி திடீரென சரிந்தார். முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதியும் அவரை தாங்க முயன்றார். அப்போது, அவரும் சேர்ந்து சரிந்து விழுந்தார். உடனடியாக, அவரை  அருகில் இருந்த பிரேமலதா, சுதீஷ்  மற்றும் கட்சியினர் தாங்கிப்பிடித்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதன் பிறகு விஜயகாந்த் சேரில் உட்கார்ந்து வாழ்த்துக்களை பெற்றார்.

Related Stories: