பாலகோட் தாக்குதலின்போது இந்திய ஏவுகணை தாக்கிதான் ஹெலிகாப்டர் நொறுங்கியது : விசாரணையில் திடுக் தகவல்

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இந்திய ஏவுகணை தாக்குதலில்தான் விழுந்து நொறுங்கியது என்பது விசாரணை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியாயினர். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. அதற்கு மறுநாள் பாகிஸ்தான் போர் விமானங்கள், காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்தன. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில்தான் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்ததாக கருதப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏர் கமாண்டோ அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன் விசாரணை அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி வெளியில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இது தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன. அந்த அறிக்கையில், ‘எதிரி நாட்டு விமானமா என்பதைக் கண்டறியும் ரேடார் சிஸ்டம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், அது எதிரி நாட்டு ஹெலிகாப்டரா அல்லது இந்திய ராணுவ ஹெலிகாப்டரா என்பதை அடையாளம் காண முடியாமல் போனது. மேலும் ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கும் இடையில் போதுமான தகவல் தொடர்பு இல்லை. இதனால் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இந்திய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: