13,000 கோடி வங்கிக்கடன் மோசடி நீரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி வரை காவலை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடில இங்கிலாந்து தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 19ம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். பின்னர், தென்மேற்கு லண்டனில் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு பலமுறை அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவை நிராகரிக்கப்பட்டன.  

இந்நிலையில், அவரது காவல் முடிந்த நிலையில் நேற்று சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதி டான் இக்ராம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, நீரவ் மோடியின் காவலை அடுத்த மாதம்  19ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். நாடு கடத்தக் கோரும் வழக்கு விசாரணைக்கான தேதிகள் அடுத்த விசாரணைக்கு ஆஜராகும்போது தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் வருகிற 2020ம் ஆண்டு மே 11ம் தேதி தொடங்கும் நீரவ் மோடியின் நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5நாள் விசாரணைக்கான தேதியை உறுதி ெசய்யும்படி நீதிமன்ற உதவியாளருக்கு அவர் உத்தரவிட்டார்.

Related Stories: