மகாராஷ்டிரா, அரியானா உள்பட 4 மாநில பாஜ நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து வியூகம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, டெல்லி ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பாஜ பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள பாஜ நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் அமித்ஷா, டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ெடல்லி மற்றும் அரியானா பாஜ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் சிங் ஜவ்டேகர், நரேந்திரசிங் தோமர் மற்றும் மகாராஷ்டிரா பொறுப்பாளர் பூபேந்தர், ஜார்க்கண்ட் பொறுப்பாளர் ஓம் மாத்தூர் ஆகியோரும் பங்கேற்றனர். இது தவிர கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் அமைப்பு செயலாளர் பிஎல் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பாஜ பொதுச்செயலாளர் அனில் ஜெயின் கூறுகையில், `‘சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார். மேலும், பிற கட்சிகளில் இருந்து பாஜவில் சேர விரும்புபவர்கள் குறித்து மாநில பாஜ தலைவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: