படப்பிடிப்பு நடந்த பகுதியில் கனமழை இமாச்சலில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை மஞ்சுவாரியர்: படக்குழுவினர் உள்பட 200 பேர் போராடி மீட்பு

திருவனந்தபுரம்: இமாச்சல  பிரதேச மாநிலத்திற்கு படப்பிடிப்புக்கு சென்ற பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினர் உள்பட 200 பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கினர். அவர்களை தீவிர போராட்டத்திற்கு பின்னர்  மீட்புக்குழுவினர் மீட்டனர்.இமாச்சலப் பிரதேசம்  உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.  வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர்  சனல்குமார் சசிதரன் இயக்கி வரும் ‘கயற்றம்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக  கடந்த சில தினங்களுக்கு முன் படக்குழுவை சேர்ந்தவர்கள் இமாச்சலப் பிரதேசம்  சென்றனர். இதில் பிரபல நடிகை  மஞ்சுவாரியர் உள்பட 30 பேர் சென்றனர்.  சிம்லாவில் இருந்து 330 கி.மீ. தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்தில்  படப்பிடிப்பு நடந்தது.   இங்கு கடந்த சில தினங்களாக  பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் படக்குழுவினர்  இருக்கும் இடத்திற்கு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  வெள்ளத்தால் சூழப்பட்ட இடத்தில்  சிக்கி உள்ள மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினரால் அங்கிருந்து  வெளியே வரமுடியவில்லை. தொலைபேசி, இன்டர்நெட் உள்பட அனைத்து தொலைதொடர்பு  சேவையும் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மஞ்சுவாரியர் தனது தம்பி மதுவாரியரிடம் சாட்டிலைட் போன் மூலம் தொடர்பு  கொண்டு பேசினார். அப்போது தான், படக்குழுவினர் 30 பேர் உள்பட 200 பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில்  சிக்கி இருப்பதாகவும், எங்களிடம் 2  நாட்களுக்கான உணவு மட்டுமே இருக்கிறது  என்றும் கூறினார். அவர் பேசிக்கொண்டிருந்த போதே இணைப்பு துண்டிக்கப்பட்டது.  அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.இதுகுறித்து மதுவாரியர் மத்திய இணை அமைச்சர் முரளீதரனை தொடர்புக் கொண்டு விவரம்  தெரிவித்தார். அவர் உடனடியாக இமாச்சல் முதல்வரிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து  மணாலியில் இருந்து  மீட்புப்படையினர் சத்ரு  பகுதிக்கு விரைந்து படக்குழுவினரை காப்பாற்றினர். அனைவரும் சுமார் 22 கிலோ மீட்டர் நடந்து கோக்‌ஷார் பகுதிக்கு வந்தனர்.  அங்கிருந்து அவர்கள் கேரளா திரும்பினர்.

Related Stories: