ஏழுமலையான் கோயில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம்: முதல்வர் ஜெகன்மோகன் விரைவில் தொடங்கி வைக்கிறார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்படும் திட்டத்தை விரைவில் முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைக்கிறார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் காலை நடைபெறக் கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை மற்றும் வாரத்திற்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை நடைபெறும் அபிஷேகம்,  வஸ்திரம் போன்ற அரிய வகை  சேவைகளுக்கும்,  சிபாரிசு கடிதங்கள் மூலம் வழங்கக்கூடிய விஐபி தரிசனத்திலும் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த டிக்கெட்டுகள் அனைவருக்கும் கிடைக்காத நிலையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக பக்தர்கள் எவ்வளவு பணம் செலவழித்தாலும் இந்த தரிசனத்தில் செல்ல  வேண்டும் என்று இடைத்தரகர்கள் மூலமாக அதிக அளவு  பணம் செலுத்தி இந்த டிக்கெட்டுகளை முறைகேடாக பெற்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மே 25ம் தேதி ஸ்ரீவாணி அறக்கட்டளையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது. இந்த அறக்கட்டளையின் மூலமாக வரக்கூடிய நிதியை அமராவதி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் அதிகம்  வசிக்கக்கூடிய பகுதிகளில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்காகவும்,  தூப, தீப, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கும் விதமாகவும் செலவு செய்யப்பட உள்ளது. அதன்படி, இந்த அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக திருமலை திருப்பதி  தேவஸ்தானம் புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதில் பக்தர்கள் 10 ஆயிரம் நன்கொடையாக செலுத்தினால் அவர்களை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிக அளவு நன்கொடை  வழங்கக்கூடிய பக்தர்களுக்கு வஸ்திரம், அபிஷேகம், சுப்ரபாதம், அர்ச்சனை போன்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினந்தோறும் முதல்  கட்டமாக 200 விஐபி டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை படிப்படியாக ஒரு நாளைக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் என உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் விஐபி தரிசனத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை தடுக்கும் விதமாகவும் பக்தர்களும் எந்தவித சிபாரிசு கடிதமும் இல்லாமல் விஐபி தரிசன டிக்கெட் பெற முடியும். இந்த திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்  விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: