தமிழக மக்கள் கொந்தளிப்பில் இருக்கும்போது பால் விலை உயர்வு சரி என்று சொல்கிறார் செல்லூர் ராஜூ: எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை: பால் விலை உயர்வால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் சூழலில் அதை வரவேற்றும் சரியான நடவடிக்கை என்று கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  சென்னை, சாலிகிராமம் ஆற்காடு சாலையில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தினை நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் பேசும்போது, “இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்- சாலிகிராமம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையம் மூலம் மாதம் சுமார் 2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாவது பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறை மூலம் 30 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது” என்றார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசால் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால் நிதி திருப்பி அனுப்பப்படுவது எல்லா ஆட்சியிலும் நடந்துள்ளது. மத்திய அரசு தரும் நிதியை பயன்படுத்த வேண்டும் என்றுதான் எல்லா அரசும் நினைக்கும். சில வரன்முறைகளை அவர்கள் குறிப்பிட்டு இருப்பார்கள், அதன்படி செயல்படுத்த முடியாதபட்சத்தில் நிதி திருப்பி அனுப்பப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பால் உற்பத்தியாளர்கள் மிக சிரமத்தில் இருக்கிறார்கள். விலைவாசியெல்லாம் ஏறி இருக்கிறது. மாட்டுத்தீவனம் விலை கூடி உள்ளது. பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது.

அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார். 6 உயர்த்தி கொடுத்ததன் மூலம் தென்இந்தியாவில் தமிழகத்தில்தான் உற்பத்தியாளர்களுக்கு 32 வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ₹30க்கும் குறைவாக வழங்குகிறார்கள். இன்று இருக்கும் விலைவாசிக்கு பால் விலை உயர்வு சரியான நடவடிக்கைதான் என்று மக்கள் நினைக்கிறார்கள். எதிர்க்கட்சியினர், அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக விலை உயர்வை எதிர்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். ஆனால் மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும்போது அவர்களின் மனநிலையை அறியாமல் பால் விலை உயர்வை வரவேற்கிறேன் என்று அமைச்சர் கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது என்று எதிர்க்கட்சிகள் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: