பெண்ணையாற்றில் அணை கட்டும் விவகாரம் கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிப்பு: 2 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பெண்ணையாற்றில் அணை கட்டுவது தொடர்பான வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் கேட்ட கர்நாடகா அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் கிளையான பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில்,”பங்காருபேட்டை பகுதியில்  புதிய தடுப்பணையை கர்நாடக அரசு கட்டுவதை நீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும். அதேப்போல் பெண்ணையாற்று பகுதியில், தடுப்பணை உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செய்வதற்கு முன் தமிழக அரசின் ஒப்புதலை கண்டிப்பாக கர்நாடக அரசு பெற நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.இந்த நிலையில் பெண்ணையாறு தொடர்பாக விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த முறை வந்தபோது தமிழக அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”பெண்ணையாற்றை பொருத்தவரையில் தமிழகத்தையும் அடிப்படையாக கொண்டு ஓடுவதால் அதற்கு கர்நாடகா அரசு உரிமைக்கோர முடியாது.

அதேப்போல் பெண்ணையாற்றின் குறுக்கே படுகை அணை கட்ட தமிழக அரசிடம் கேட்காமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசின் மனுவிற்கு கர்நாடகா பதிலளிக்க காலதாமதம் செய்து வந்ததால் 2 வாரம் அவகாசம் கொடுத்து கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா தரப்பில், பதிலளிக்க கூடுதல் அவகாசமாக மேலும் 4 வாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.     நீதிபதிகள் உத்தரவில்,”பெண்ணையாறு தொடர்பான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதிலளிக்க ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டது.  கர்நாடகா அரசு அலட்சியல் செய்துவிட்டு தற்போது மீண்டும் கூடுதலாக 4 வாரம் அவகாசம் கேட்கிறது. அடுத்த 2 வாரத்தில் கண்டிப்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை  3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: