மணமகள் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது திருமணம் முடிந்த உடன் மனைவியை அலேக்காக தூக்கி சென்ற வாலிபர்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

திருவனந்தபுரம்: கேரளாவில் மணமகளின் வீட்டை வெள்ளம் சூழந்ததால் தாலி கட்டிய மனைவியை மணமகன் அலேக்காக தூக்கி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.ேகரளாவில் கனமழையால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் கண்ணூரில் கனமழையால் மணமகளின் வீட்டை வெள்ளம் சூழ்ந்தபோதும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தி முடித்தனர். கண்ணூர் அருகே சிரக்கொல்லி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் திவ்யாவின் திருமணம் நேற்று  முன்தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இரு வீடுகளிலும் மணப்பந்தல் போடப்பட்டு திருமண ஏற்பாடுகள் தடபுடாலாக நடந்து வந்தது.இந்த நிலையில் கனமழையால் மணமகள் வீட்டை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து உறவினர்கள், மணமகன் வீட்டார் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் திருமணத்தை குறித்த நேரத்தில் நடத்த முடிவு செய்தனர்.  அப்பகுதி திருமண மண்டபங்களும் வெள்ளத்தால் சூழ்ந்திருந்ததால் திருமணத்தை வேறு இடத்துக்கும் மாற்ற முடியவில்லை.

இதையடுத்து குறித்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை மணமகளின் வீட்டில் வைத்து நடத்திட தீர்மானித்தனர். மணமகளின் வீட்டு முன் புதிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மணமேடையும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து  வீட்டுக்குள் வைத்து தாலிகட்டும் நிகழ்ச்சியை நடத்த தீர்மானிக்கப்பட்டது. வாகனங்கள் எதுவும் செல்ல முடியாததால், சிலர் நடந்தும், பலர் படகிலும் மணமகள் வீட்டிற்கு சென்றனர். குறித்த நேரத்தில் மணமகள் கழுத்தில் ராஜேஷ்  தாலிகட்டினார். பின்னர் வெளியே வந்த மணமகளுக்கு தண்ணீரில் கால்வைக்க தயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மணமகன் ராஜேஷ் தனது மனைவி திவ்யாவை அலேக்காக தூக்கி சென்றார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

Related Stories: