வருங்காலங்களில் ஜனவரி மாதத்தில் மேட்டூர் அணையை மூடிய பிறகே குடிமராமத்து பணி துவங்க வேண்டும் : முத்தரசன் கோரிக்கை

தஞ்சை: வருங்காலங்களில் ஜனவரி மாதத்தில் மேட்டூர் அணையை மூடியவுடன் குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டுமென தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று  அளித்த பேட்டி: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்ததற்காக 30 மாணவர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ் வழங்கிய செயல் கண்டிக்கத்தக்கது.

கடந்தாண்டு முக்கொம்பு அணை உடைந்தது. இதற்காக நிரந்தரமாக அணை கட்டுவதற்கு ரூ.387.60 கோடியும், தற்காலிக அணை கட்டுவதற்கு ரூ.38.85 கோடி ஒதுக்கப்பட்டு 6 மாதங்களில் தற்காலிக அணை கட்டும் பணி முடியும் என்றனர். ஆனால் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் அதிகளவில் தண்ணீர் வந்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இனி வருங்காலங்களில் ஜனவரி மாதம் மேட்டூர் அணை மூடப்பட்டவுடன் குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டும். தண்ணீர் வந்ததும் அவசரமாக பணிகளை முடித்து விட்டு பணத்தை பெற்று கொள்வது பகல் கொள்ளையாகும். போர்க்கால அடிப்படையில் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி வரும் தண்ணீரை சேமிக்காவிட்டால் வெண்ணெய்யை வைத்து கொண்டு நெய்க்கு அலையும் பைத்தியக்கார தனமாகி விடும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: