5 ஆண்டுகளில் யோகா தின கொண்டாட்டத்துக்கு 140 கோடி செலவிட்ட மத்திய அரசு

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் யோகா தின கொண்டாட்டங்களுக்காக மத்திய அரசு 140 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி தலைமையிலான பாஜ அரசு கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடி வருகிறது.  இந்த ஆண்டு கடந்த மாதம் 21ம் தேதி  யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் கலந்து ெகாண்டு யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சிக்காக 40 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் இந்த செலவு தொகையை உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டில் யோகா தின நிகழ்ச்சிக்காக 20 கோடி செலவிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இருமடங்கு உயர்ந்துள்ளது.  முந்தைய 2015 முதல் 2017ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் 73 கோடி, யோகா தின நிகழ்ச்சிகளை நடத்த செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 140 கோடி யோகா தின நிகழ்ச்சிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

 

இந்த தொகை யோகா நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவருக்கும் சத்து நிறைந்த சிற்றுண்டி, இனிப்பு வகைகள், குடிநீர் மற்றும் நினைவுப் பொருட்கள் வழங்குதல், எழுதுப்பொருட்கள், பந்தல் பங்கேற்பவர்களை ஏற்றி செல்ல வாகனங்களுக்கான கட்டணம், விருந்தினர்களுக்கு தங்கும் விடுதிக்கான கட்டணமும் இந்த தொகையில் அடங்குகிறது. இது தவிர யோகா தின நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த கடந்த ஆண்டு ₹64 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது தவிர யோகா தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தூதரகங்களின் செலவுக்காகவும் மேலும் 16 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories: