கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு

திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கும்  மேலாக  பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து  கடந்த 3 நாட்களில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. எர்ணாகுளம் பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த தமிழகத்தின் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.

கண்ணூரில் மணிக்கடவு என்ற பகுதியில் நிதிஷ் என்பவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். அதேப்போல கிடங்கநல்லூர் பகுதியிலும் பிஜூ என்பவர் ஆற்றில் மூழ்கி பலியானார். கோட்டயம் பகுதியில் மனோஜ் என்ற ஆட்டோ டிரைவர் மாயமாகியுள்ளார். திருச்சூரில் விஷ்ணு என்ற 19 வயது மாணவர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.

 

மேலும் கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  காசர்கோடு, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து  வருகிறது.  நாளை வரை காசர்கோடு, வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக  கேரளா முழுவதும் 7 மாவட்டங்களில் வெள்ள நிவாரண முகாம்கள்  திறக்கப்பட்டுள்ளன. இதில் 165 குடும்பங்களை சேர்ந்த 835 தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: