கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா?: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்க்கும் ஆளுங்கட்சி

பெங்களூரு: கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கும் விவகாரம் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் இடைக்கால தீர்ப்பு இன்று வெளியாக இருக்கும் நிலையில், முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று ஓட்டெடுப்பு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். இதனால், ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்ய கடந்த 12ம் தேதி முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் மனு கொடுத்தார். அதை ஏற்று சபாநாயகர் அனுமதி அளித்தார். நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி தொடங்கியது. விவாதத்தின்போது இருதரப்பு எம்எல்ஏக்களும் ஆக்ரோஷமாக பேசியதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. விவாதம் நீண்டு கொண்டே போனதால், சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். இதனால், பாஜவினர் கவர்னர் வஜுபாய் வாலாவிடம் முறையிட்டனர். அவர், மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தும்படி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

Advertising
Advertising

இந்நிலையில் மறுநாள் பேரவை கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது வாக்கெடுப்பு மீதான விவாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இதையடுத்து  பிற்பகல் 3 மணிக்கு, ஆளுநர் மீண்டும் குமாரசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் படி உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் இரண்டாவது கெடுவையும் நிராகரித்த முதல்வர் குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து எனது ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.  பின்னர், மேலும் விரிவான விவாதம் நடக்க வேண்டியிருப்பதால் திங்கட்கிழமை வரை சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும்,, கவர்னரின் கடிதம் குறித்து முதல்வர் குமாரசாமிவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  மேலும்  கடந்த வெள்ளிக்கிழமை சித்தராமையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர தேவையில்லை. அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு வாதி, பிரதிவாதிகளின் வாதங்களும் நடைபெற்றது.

 இந்த மனு மீதான இடைக்கால தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இடைக்கால தீர்ப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ஆளுங்கூட்டணிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால் அதை வைத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சுலபமாக சட்டப்பேரவைக்கு வரவழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்பது அவர்களின் திட்டமாக உள்ளது. சட்டப்பேரவைக்கு வராதவர்களை கட்சித் தாவல் சட்டத்தின்படி பதவி இழப்பு செய்ய ஆளுங்கூட்டணி கட்சியினர் முடிவெடுத்துள்ளனர். அதேசமயம் தீர்ப்பு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக அமைந்தால் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.எனவே, உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை பொறுத்து கூட்டணி ஆட்சி நிலைக்குமா அல்லது கவிழுமா என்பது தெரியவரும். ஒருவேளை உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பை வெளியிடவில்லை என்றால், சட்டப்பேரவையை செவ்வாய்க்கிழமை வரை நீட்டிக்க ஆளுங்கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.அதிலும், நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என ஆளுநர் பிறப்பித்த உத்தரவை காரணம் காட்டி அதன் மீது விவாதம் நடத்தி காலம் கடத்த ஆளும் கட்சியினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்று நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கிடையே சுயேச்சை எம்எல்ஏக்களான நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான வழிகாட்டுதல் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாயாவதி உத்தரவு: பிஎஸ்பி எம்எல்ஏ ‘ஜகா’

கர்நாடகாவில் ஒரே பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ.வான மகேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாளை (இன்று) பேரவையில் நடக்கும் வாக்கெடுப்புக்கு நான் செல்லமாட்டேன். கூட்டணி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிப்பேன். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் என்றார்.  இதற்கிடையில் மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘எங்களின் ராஜினாமா கடிதம் கொடுத்தது கொடுத்ததுதான். அதை வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை’’ என்று கூட்டாக கூறியுள்ளனர்.

Related Stories: