உள்ளாட்சி தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு திமுக கடும் எதிர்ப்பு: குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது

சென்னை: உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவை நேற்று முன்தினம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதா குறித்து வில்லிவாக்கம் தொகுதி திமுக உறுப்பினர் ப.ரங்கநாதன் பேசும்போது, “இந்த மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்” என்றார்.

திமுக எம்எல்ஏ ப.ரங்கநாதன் பேசிக்கொண்டிருக்கும்போது ஆளுங்கட்சி தரப்பில் உறுப்பினர்கள் சில வார்த்தைகளை தெரிவித்தனர். அதிமுக உறுப்பினர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரங்கநாதன் கோபமடைந்து இதை தொடர்ந்து பேசிய சபாநாயகர், உறுப்பினர்கள் அமைதி காக்கவும், உறுப்பினர் ப.ரங்கநாதன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறி, உறுப்பினர்களை அமைதிப்படுத்தினர். இதை தொடர்ந்தே சபையில் அமைதி திரும்பியது. திமுகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலம்  நீட்டிப்பு சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல நேற்று ஒரே நாளில் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது .

Related Stories: