என்பிசிசியில் லஞ்சம் பெற்ற வழக்கில் 7 பேரை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: தேசிய கட்டுமான கழகத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் 2 மூத்த அதிகாரிகள் உட்பட 7 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.  எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான எல்லையில் புறநிலைகளை அமைக்கும் பணிக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக என்பிசிசி மூத்த அதிகாரிகள் உட்பட 7 பேரை சிபிஐ நேற்று கைது செய்தது. டெல்லியில் உள்ள என்பிசிசி எனப்படும் தேசிய கட்டுமான கழகத்தில், எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான எல்லை புறநிலைகளை அமைக்கும் பணிக்கான நிதிகளை விடுவிக்க அனுமதி அளிப்பதற்காக அதன் அதிகாரிகள் லஞ்சம் கைமாறியுள்ளதாக சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் டெல்லி, சில்சார், ஜல்பாய்குரி, கவுகாத்தி உட்பட 18 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

இதில் சுனில் குமார் என்பவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். என்பிசிசி மண்டல மேலாளர் ராகேஷ் மோகன் கோட்வால், மேலாளர் லடிபுல் பாஷா ஆகியோர் சார்பாக லஞ்ச பணத்தில் ஒரு பகுதியாக 25 லட்சத்தை பெற்றபோது சுனில்குமார் பிடிபட்டார்.  அவர் கொடுத்த தகவலின்பேரில் ராகேஷ் மோகன் கோட்வால், மேலாளர் லடிபுல் பாஷா உட்பட 6 பேரை சிபிஐ கைது செய்தது.

Related Stories: