ராஜினாமாவை ஏற்க உத்தரவிடக்கோரி 5 கர்நாடக எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரி மேலும் 5 கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மேலும் 5 பேர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி எம்எல்ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதங்களை சாபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில், ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ராஜினாமா கடிதங்கள் குறித்து சபாநாயகர் 12ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ராஜினாமா செய்த அனைத்து எம்எல்ஏக்களும் சபாநாயகரை நேரில் சந்தித்து கடிதங்களை வழங்க உத்தரவிட்டது. இதற்கிடையே, ராஜினாமா கடிதங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தமக்கு உத்தரவிட முடியாது என சபாநாயகர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதேசமயம் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா குறித்து உரிய விளக்கங்களை அளித்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு 12ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. மேலும் அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. ஆகையால் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு இந்த வழக்கை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், நாகராஜ், ரோஷன் பெய்க், சுதாகர், முனிரத்னா, ஆனந்த் சிங் ஆகிய 5 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுக்களை மற்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த மனுக்களுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று கோரிக்கை வைத்துள்ளனர். அந்த, கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, மூல வழக்கோடு சேர்த்து இந்த மனுக்களையும் ஒன்றாக விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே மும்பை சென்று அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க முடிவு செய்துள்ளனர். மறுபுறம், மும்பை விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பாதுகாப்பு கோரி காவல் ஆணையருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: