வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் அமமுக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

சென்னை: வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் அமமுக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஞானசேகரன் இணைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த பிறகு, அமமுக கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஜூன் 28ம் தேதி, அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். இந்த சம்பவம் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பற்றி அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

மேலும் தங்க தமிழ்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர். இந்த நிலையில், வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சி.ஞானசேகரன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். பின் அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.  அதே போல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அமமுகவின் மாவட்ட நிர்வாகியான பாண்டுரங்கனும், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: