தமிழகத்தை போன்று ஆந்திராவில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டம்: 10,500 பேருக்கு வேலைவாய்ப்பு ,..20% மது கடைகள் குறைப்பு

திருமலை: தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 10,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் 20 சதவீதம் மதுக்கடைகள் குறைக்கப்படுகிறது. ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன் ஒரு கட்டமாக கிராம பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்கப்படும் சிறிய கடைகளை (பெல்ட் ஷாப்கள்) மூடுவதற்கு உத்தரவிட்டார். மேலும் மது விற்பனையில் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு என்னென்ன விதி முறைகளை கடைபிடிக்கிறது என அதிகாரிகள் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். இந்தநிலையில், ஆந்திராவில் 4,377 மது விற்பனை செய்வதற்கான உரிமத்தை தனியாருக்கு அரசு வழங்கியிருந்தது. இந்த உரிமம் வழங்கப்பட்ட கடைகளுக்கு  செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கலால் துறை முதன்மைச் செயலாளர் சாம்பசிவராவ் உத்தரவிட்டார்.

Advertising
Advertising

மேலும் மாநிலம் முழுவதும் அரசே மதுபானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள மதுக்கடைகளில் 20 சதவீதம் குறைத்து, மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.  அதன்படி 4,377 மதுக்கடைகளில்,  876 கடைகள் குறைக்கப்பட்டு, 3504 கடைகள்  அக்டோபர் 1ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. இதற்காக அரசின் மது விற்பனைக்கான கொள்கைகளை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் அரசே மதுபானங்களை விற்பனை செய்தாலும் கலால் துறைக்கு  தொடர்பில்லாதவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று இங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக நகரப்பகுதிகளில் ஒரு கடைக்கு நான்கு ஊழியர்களும், கிராமப்பகுதிகளில் ஒரு கடைக்கு 3 ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கடை திறந்திருக்கும்.

ஆனால் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு குறைந்தளவு சம்பளம் வழங்கப்படுவதால், முறைகேடுகள் செய்வதற்கு அதுவே வழிவகுப்பதாகவும், இதனால் எம்ஆர்பி விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகள் செய்யும் வகையில் ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, அவ்வாறு, இல்லாமல் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கி முறைகேடுகள் ஏற்படாத வகையில் மதுக்கடை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசே மதுக்கடைகளை நடத்துவதால் 600 கோடி ரூபாய் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் தற்போது மதுக்கடைகளில் 20,000 கோடிக்கு மது  விற்பனை செய்யப்படுகிறது. இதில் 2,000 கோடி வரை மது கடை நடத்துபவர்கள் பயன்பெறுகின்றனர். அவ்வாறு பார்க்கும்போது அரசே மதுபானங்களை விற்பனை செய்வதன் மூலமாக 600 கோடி  செலவு ஏற்பட்டாலும் மீதத் தொகை அரசுக்கு லாபம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: