நிருபரை தாக்கியதாக சல்மான் கான் மீது வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்தார்

அந்தேரி: செய்தி தொலைக்காட்சி நிருபரை தாக்கிவிட்டு அவருடைய செல்போனை பறித்ததாக நடிகர் சல்மான் கான் மீது மும்பையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட நிருபரின் வழக்கறிஞர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றை சேர்ந்த நிருபர் அசோக் பாண்டே. ஏப்ரல் 24ம் தேதி இவர் மும்பையின் ஜூகுவில் இருந்து காந்திவலிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சைக்கிளில் சென்ற நடிகர் சல்மான் கானை படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் கான் அவரை தாக்கியதோடு, செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அசோக் பாண்டே டி.என்.நகர் போலீசில் புகார் செய்தார்.  ஆனால், போலீசார் தன் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அசோக் பாண்டே தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கும் அவருடைய இரு பாதுகாவலர்களுக்கும் எதிராக அசோக் பாண்டே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அசோக் பாண்டே சார்பில் அவருடைய வழக்கறிஞர் நீரஜ் குப்தா இந்த வழக்கை அந்தேரி பெருநகர நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: