காஷ்மீரின் ட்ரால் பகுதியில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் தீவிராதி ஒருவன் சுட்டுக் கொலை..: ஆயுதங்கள் மீட்பு

புல்வாமா: காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்புப் படையினர்-பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் தீவிராதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, ராஷ்டிரிய ரைஃபிள் படையின் 42வது பிரிவை சேர்ந்த வீரர்கள், சிறப்பு தேடுதல் குழுவுடன் இணைந்து ட்ரால் பகுதியில் உள்ள பிரான்பத்ரி வனப்பகுதியை சுற்றிவளைத்து, அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தங்கள் பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் நுழைந்ததை கண்ட பயங்கரவாதிகள், அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சி.ஆர்.பி.எஃப் பட்டாலியன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புப்படை வீரர்களும் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல் மற்றும் ஆயுதம், வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த அமைப்பை சேர்ந்தவன் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகையை ஒட்டி அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: