எடப்பாடி தரப்பினர் வரவேற்ற நிலையில் அதிமுகவில் தங்க தமிழ்செல்வனை சேர்க்க ஓபிஎஸ் எதிர்ப்பு : கட்சி தலைமையிடம் ‘கறார்’

சென்னை: அதிமுகவில் தங்க தமிழ்செல்வனை சேர்க்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டார். பின்னர், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய இருவரும் ஓரணியாக இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர், ஜக்கையன் மட்டும் பிரிந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

அதன்படி, 18 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் எதிர்மறையாக தீர்ப்பு வரவே அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எனவே, இதை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட பல மாஜி எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு செய்ய நினைத்தனர். ஆனால், அனைவரும் இடைத்தேர்தலை சந்தித்துக்கொள்ளலாம் என தினகரன் தெரிவித்துவிட்டார். அதன்படி, நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 14 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தங்களின் தொகுதிகளில் போட்டியிட்டனர்.இதில் தங்க தமிழ்செல்வன் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து இத்தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் போட்டியிட்டார். இதனால், எப்படியாவது ஓ.பன்னீர் செல்வத்தின் மகனை தோற்கடிக்க வேண்டும் என தங்க தமிழ்செல்வனுக்கு டிடிவி.தினகரன் உத்தரவிட்டார். தங்க தமிழ்செல்வன் தேனியில் பிரபலமான நபராக இருந்தாலும் பரிசு பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

தேர்தல் நடந்த சமயத்திலேயே தங்க தமிழ்செல்வன் இதுகுறித்து தினகரனிடம் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொள்ளுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என தினகரன் கூறிவிட்டார். அதன்படி, தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்செல்வன் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதேபோல், பிரச்சாரத்தின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்க தமிழ்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள செல்லவில்லை. இதனால், அப்போதில் இருந்தே கட்சியில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்தநிலையில், தேர்தல் முடிவில் அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. தினகரன் பெரிதும் எதிர்பார்த்த திருச்சி, தேனி ஆகிய இடங்களில் கூட வெற்றிபெற முடியவில்லை. தேனி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் 1 லட்சத்து 44 ஆயிரத்து 50 வாக்குகளையே பெற முடிந்தது. தன்னுடைய தோல்விக்கு சரியாக வேலை செய்யாத நிர்வாகிகளே காரணம், எனவே அவர்களை கட்சியில் இருந்து நீக்குமாறு தினகரனிடம் தங்க தமிழ்செல்வன் கோரிக்கை வைத்தார். ஆனால், அவருடைய கோரிக்கையை தினகரன் செவிசாய்க்கவில்லை என்று தெரிகிறது.

இதனால், கடும் அதிருப்திக்கு ஆளான தங்க தமிழ்செல்வன் டிடிவி.தினகரனை சந்திப்பதை தவிர்த்து வந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு அமைதியாக இருந்த தங்க தமிழ்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் தினகரனை ஆபாச வார்த்தைகளால் தங்க  தமிழ்செல்வன் வசைபாடிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த  ஆடியோவிற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காத தங்க தமிழ்செல்வன் கட்சியில்  இருந்து என்னை நீக்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துவிட்டார். இதேபோல்,  தினகரனும் கூடிய விரைவில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று  கூறியுள்ளார்.  இதனால், அதிமுகவில் தங்க தமிழ்செல்வனை இணைக்க எடப்பாடி பழனிசாமி ரகசிய ஒப்புதழ் தெரிவித்துள்ளாராம். ஆனால், கட்சியில் இணையவேண்டும் என்றால் தேனி தொகுதியில் முக்கிய பொறுப்பை கொடுக்க வேண்டும் என தங்க தமிழ்செல்வன் அதிமுக தலைமைக்கு நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இசைவு தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்செல்வனுக்கு முக்கிய பொறுப்பை கொடுத்தால் அது தனது ஆதரவாளர்களுக்கு எதிராக அமையும் எனவும் கூறியுள்ளார். அப்படி, கட்சியில் வந்து இணைந்தாலும் மாவட்டத்தில் முக்கிய பொறப்பை கொடுக்கக் கூடாது என ஓ.பி.எஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம். இதனால், எடப்பாடி தரப்பினர் ஓ.பன்னீர் செல்வத்தை சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதேபோல், தங்க தமிழ்செல்வன் முக்கிய அமைச்சர்களுடன் அதிமுகவில் கூடிய விரைவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்றோ, அல்லது நாளையோ அவர் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

உச்சக்கட்ட மோதல்

‘அண்ணன் எடப்பாடியின் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிரான திட்டத்தை வரவேற்கிறேன். அமமுகவை மக்கள் ஏற்கவில்லை’ போன்ற கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், தங்க தமிழ்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் நாங்கள் சேர்த்துக்கொள்வோம் எனவும் அமைச்சர் ஜெயக்குமாரும் வரவேற்றார். அதன்படி, தங்க தமிழ்செல்வன் கூடிய விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனால், தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியது.

Related Stories: