ஏற்கனவே நான்கு பேரை திருமணம் செய்தவர் 5வது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்: நாசிக் மாவட்டத்தில் சம்பவம்

நாசிக்: ஏற்கனவே நான்கு முறை திருமணமாகி ஐந்தாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் மன்மாட் நகரை சேர்ந்தவர் ஜெயேஷ் டோங்க்ரே. இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பெண் தேடி வந்தனர். அப்போது லத்தூரை சேர்ந்த பூஜா பக்வான் என்ற பெண், இவர்களிடம் தனக்கு தெரிந்த ஒரு பெண் இருப்பதாக தெரிவித்தார். அக்மத்பூரை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ஜோதி பேந்த்ரே என்றும் நன்கு படித்தவர் மற்றும் அழகாக இருப்பார் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜெயேஷ் டோங்க்ரேயும் குடும்பத்தினரும் பெண்ணை பார்ப்பதற்காக அக்மத்பூர் சென்றனர். பெண்ணை ஜெயேஷுக்கு பிடித்துவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே 12ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. எனினும் பெண் வீட்டார் ஏழையாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பு அந்த குடும்பத்துக்கு ₹40,000 கொடுத்தனர். மேலும் பெண்ணுக்கு ₹50,000 மதிப்புக்கு நகையும் போட்டனர்.
Advertising
Advertising

ஜோதி திருமணத்துக்கு பிறகு சில நாட்கள்தான் கணவர் வீட்டில் வசித்தார். பிறகு தன் தாயார் வீட்டுக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. அவரை திரும்ப அழைத்து வர ஜெயேஷ் டோங்க்ரே குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால் ஜோதி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்தபோது ஜோதிக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் ஆகியிருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக மன்மாட் காவல் நிலையத்துக்கு சென்று ஜோதி பெண்ட்ரே, அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஜோதி பற்றி தகவல் கொடுத்த பூஜா மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் மீது புகார் அளித்தனர். தங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அறிந்ததும் அவர்கள் அனைவரும் ஜெயேஷ் டோங்க்ரேயின் வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது, ஜோதி ஐந்தாவதாக திருமணம் செய்ய தயாராகி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories: