வேகமாக பறக்கும் தேன்சிட்டு!

தேன்சிட்டுகள் அமெரிக்காவில் உள்ள ஹம்மிங் பேர்ட் ரகத்தைச் சேர்ந்தவை. இப்பறவைகள், உருவத்தில் சிட்டுக்குருவியைவிடச் சிறியவை. ஹம்மிங் பேர்டை விடப் பெரியவை. பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர்நிற அடிப்பாகத்தையும் கொண்டது. ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கருநீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகு கருநீலத்திலுமாகவும் அடிப்பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் இதன் பெயர் ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் (Purple-rumped Sunbird)’ என்பதாகும். தமிழ்நாட்டில் காணப்படும் தேன்சிட்டுகள் இருவகைப்படும். ஒன்று ஊதாத் தேன்சிட்டு. மற்றொன்று ஊதாப்பிட்டு தேன்சிட்டு என்பதாகும். இரண்டாவது வகையே நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும். முதல் வகையை ஸ்க்ரப் ஜங்கிள் என்று அழைக்கப்படும் சிறு காடுகளில்தான் அதிகம் பார்க்கமுடியும்.

ஊதாப்பிட்டு தேன்சிட்டு வகையின் ஆண் குருவி கருநீல நிறத்தில் இருக்கும். அதன் கழுத்தும் தலையும் மயில் கழுத்துப்போல மின்னும். ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird, Cinnyris asiaticus) ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுகளைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டவை மட்டுமல்ல ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். முன் பக்கமாகவும், பின்பக்கமாகவும், பக்கவாட்டிலும், தலைகீழாகவும்கூட அந்தரத்தில் சாகசம் புரியும். இது மணிக்கு 50 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்து, டக்கென்று பிரேக் போடுமாம். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும். தேன்சிட்டின் கூடு செடிகளின் கிளைகளிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

காய்ந்த சருகு, வேர்கள் இவற்றால் சிலந்தியின் வலைத்துண்டுகள் கொண்டு ஒட்டப்பட்டிருக்கும். வெளியே ஆங்காங்கே சிறிய வெள்ளைக் காகிதத் துண்டுகளோ அல்லது எட்டுக்கால் பூச்சியின் முட்டைகளைப் பாதுகாக்கும் உறையோ (வெள்ளை நிறத்தில் சுமார் ஒரு சென்டிமீட்டர் விட்டத்தில் வட்டமாக இருக்கும்) ஒட்டப்பட்டிருக்கும். இவ்வாறு செய்வது அழகுக்காகவா அல்லது கூட்டினை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவா என்பது இப்பறவைகளைப் படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கூட்டுக்குள்ளே செல்ல பக்கவாட்டில் சுமார் மூன்று அல்லது நன்கு சென்டிமீட்டர் அளவிலான துவாரம் இருக்கும். அந்த துவாரத்திற்கு ஒரு ‘சன் ஷேடும்’ அமைக்கப்பட்டிருக்கும். கூட்டின் கீழ்ப் பாகத்திலிருந்து சிறிய காய்ந்த இலைச் சருகுத் துண்டுகள் தொங்கிக்கொண்டிருக்கும். கூட்டின் உள்ளே பஞ்சு மெல்லிய வேர்த்துண்டுகள் இவற்றால் மெத்தை அமைக்கப்பட்டிருக்கும். கூட்டினை முழுமையாக கட்டுவது பெண் குருவியே. ஆண் குருவியோ தானும் விழுந்து விழுந்து வேலை செய்யும் பாவனையில் கூட கூட பறந்துகொண்டிருக்கும்.

Related Stories: