80,000 கோடியில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய காலேஸ்வரம் நீர்பாசன திட்டத்தை துவக்கி வைத்தார் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்; தெலங்கானாவில் ரூ.80 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள காலேஸ்வரம் பல அடுக்கு நீர்பாசன திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கும் கோதாவரி ஆறு, தெலங்கானா வழியாக பாய்ந்து ஆந்திரா அருகே கடலில் கலக்கிறது.  இந்த நிலையில், தெலங்கானாவின் ஜெயசங்கர் - பூபால்பல்லி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா பகுதியில் காலேஸ்வரம் நீர்பாசன திட்டம் கட்டப்பட்டு வந்தது. ரூ.80,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த இந்த திட்டத்தின் கட்டுமான பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கவர்னர் நரசிம்மன், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மெடிகட்டா தடுப்பணையில் நடைபெற்ற யாக நிகழ்ச்சியில் சந்திரசேகர ராவ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த திட்டம் மூலம் 45 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருபோகமும் நீர்பாசன வசதி பெறும். இது தவிர பகீரதா குடிநீர் திட்டத்திற்கும் நீர் வழங்க முடியும். ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட ஐதராபாத் நகருக்கு தினமும் குடிநீர் வழங்க முடியும். இது தவிர, மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு 16 டிஎம்சி நீர் வழங்க முடியும்.

Related Stories: