2 மாநிலங்களவை பதவிக்கு தனித்தனியாக தேர்தல் காங். மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: குஜராத்தில் காலியாகி உள்ள 2 மாநிலங்களவை பதவிக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்துள்ள மனுவிற்கு 24ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலும், ஸ்மிருதி இரானி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாக, குஜராத், உ.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வான அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் அப்பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, காலியாகியுள்ள 2 மாநிலங்களவை பதவியும் காலியிடமாக கருதப்படும். இரண்டு தொகுதிக்கும் தனித்தனியாக    தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 தொகுதிகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தும் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தின் அம்ரேலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும் எதிர்க்கட்சி தலைவருமான பரேஷ்பாய் தனானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் தற்போது நாங்கள் எதுவும் கூற முடியாது. இது சாதாரண காலியிடமா அல்லது நியமிக்கப்பட்ட காலியிடமா என நாங்கள் தீர்மானிக்க வேண்டும். காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் வருகிற 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

Related Stories: