மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி விவசாயிகள் போராட்டம்

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று  மன்னார்குடி அருகே விவசாயிகள்  வயலில் இறங்கி தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு, நிலத்தடி நீர் குறைந்து குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் என்று விவசாயிகள், பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்   சார்பில் கடந்த 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் கிணறு அமையவுள்ள  கர்ணாவூரில் நேற்று  காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நடவு செய்யப்பட்ட வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி உள்ளிட்டோர்   தலைமை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்,  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசின் தமிழக விரோத, விவசாயிகள் விரோத போக்கிற்கு மாநில அரசு துணை நிற்க கூடாது என்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 3 விவசாயிகள் நூதன முறையில் தூக்கு மாட்டிக் கொள்ளும் போராட்டம் நடத்தினர். அதாவது வயலில் கம்பு நட்டு, அதில் கயிறு தொங்க விட்டு, அந்த கயிற்றில் கழுத்தை நுழைத்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Related Stories: