பக்தர்களிடையே பிரிவினையை உருவாக்குகிறது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யுங்கள்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்களிடையே பிரிவினையை உருவாக்கும் விஐபி தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர்கள் என முக்கிய பிரமுகர்கள் தினமும் காலையில் விஐபி தரிசன டிக்கெட்டில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு பக்தர்கள் வருகையை பொறுத்து டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக முக்கிய பிரமுகர்களின் தகுதிக்கு ஏற்ப எல்1, எல்2, எல்3 என மூன்று வகையாக விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. அவ்வாறு தினமும்  1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் விஐபி தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தம்மிடிபாடு கிராமத்தை சேர்ந்த சுப்பாராவ் என்ற பக்தர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்பாராவ் தரப்பு வக்கீல், ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் என்ற பெயரில் பக்தர்கள் மத்தியில் பிரித்து பார்ப்பது சம உரிமை சட்டத்தை மீறுவதாகும். உச்ச நீதிமன்றம் தெரிவித்த கடவுள் வழிபாட்டில் சம உரிமை முறையை தேவஸ்தானம் கடைபிடிப்பது இல்லை. விஐபி தரிசனத்தில் முறைகேடுகள் நடக்கிறது. எனவே ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான வழக்கறிஞர் தங்கள் வாதத்தை தெரிவிப்பதற்காக நீதிபதி அடுத்த வாரம் வரை காலக்கெடு வழங்கியுள்ளார். மேலும் திருப்பதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவீன்குமார் ரெட்டி தொடர்ந்த பொதுநல வழக்கில் தேவஸ்தான நிதியை அரசு பணிகளுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தார். அதில் திருப்பதி விமான நிலையத்திற்கு செல்லும் சாலை அமைப்பதற்காக தேவஸ்தானம் ₹10 கோடி நிதி  வழங்கியிருப்பதாகவும், இந்து தர்ம பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டிய நிதியை அரசு பணிகளுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கும் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தநிலையில், தேவஸ்தான வழக்கறிஞர் பக்தர்களின் வசதிக்காக சாலை அமைப்பதாக தெரிவித்தார். இருப்பினும் இது போதிய விளக்கமாக இல்லை என்பதால் ஜூலை 1ம் தேதி மீண்டும் பரிசீலித்து தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டும் என தேவஸ்தானத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: