குடிக்க தண்ணீர் கேட்டால் மதுக்கடைகளை திறப்பதா? : அதிமுக அரசு மீது எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு

சென்னை: நாங்கள் குடிக்க தண்ணீர் கேட்கிறோம். எங்களுக்கு மதுக்கடைகள், சூதாட்ட விடுதிகளை கொடுப்பதா என்று பொதுமக்கள் கேள்வி கேட்பதாக அதிமுக அரசு மீது பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் அளித்த பேட்டி: அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் ஆதரவுடன் தமிழகத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நடத்திவிட வேண்டுமென்று ஆட்சியில் இருப்பவர்கள் கருதினாலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சிலர் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கட்சியை தோல்விப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் வழியில் தொண்டர்கள் ஆட்சி என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகிறார்கள். அவையெல்லாம் பெயரளவில் மட்டும் தான் நடக்கிறதா என்ற சந்தேகம் ஈரோடு மாவட்டத்தில் எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு புறநகர் மாவட்டத்தில் எம்.பி தேர்தலின் போது அதிமுக தொண்டர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஆனால் அங்கு பதவியில் இருக்கும் சிலரின் துரோகத்தால் வீழ்ச்சியை அடைந்தோம். அதிமுக கட்சிக் கரை வேட்டி கட்டிக்கொண்டும் அதிமுகவின் முதுகில் குத்தி தோல்வியடைய ச் செய்தார்கள். திருப்பூர் தொகுதியில் அதிமுகவின் பதவியில் இருப்பவர்கள் செய்த துரோகத்தால் தான் வீழ்ந்தோம். இது தொடர்பான பல ஆதாரங்களை பெருந்துறை தொகுதியில் அதிமுக தொண்டர்கள் கையொப்பமிட்டு தலைமைக்கு அளித்திருக்கிறோம். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால் உண்மையான தொண்டர்கள் கோரிக்கையை கேவலப்படுத்தும் வகையில் யார் கட்சிக்கு எதிராக வேலை பார்த்தார்களோ அவர்களுக்கு பெருந்துறையில் சூதாட்ட கிளப் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த வேதனையில் தொண்டர்கள் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மீண்டும் முதல்வர் தலைமையில் சிறந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறோம். இந்த வெற்றியை பெற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் ஏழைகளுக்கு வீட்டுமனைகள் வழங்கவும் திட்டமிட வேண்டும். இன்னும் மக்கள் நம்மிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.  மக்களுக்கு தேவையான பாதையில் நாம் செல்லவேண்டும். பெருந்துறை தொகுதிக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் வேண்டும் என்ற எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கி திட்டப் பணிகள் நடக்கும் போதே இந்த திட்டத்திற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. நாங்கள் பெருந்துறை தொகுதிக்கு குடிதண்ணீர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒரு எம்.எல்.ஏவான எனக்கே தெரியாமல் பெருந்துறையில், புதிதாக சூதாட்ட கிளப் மற்றும் தனியார் மதுபான பார் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இது முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்ப நினைத்தோம். அப்போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தொடர்பு கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். மற்ற கோரிக்கைகளும் முதல்வரால் நிறைவேற்றப்படும். செயற்குழுவில் வேறு எந்த கேள்வியும் எழுப்ப வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று கூறினார். முதல்வர் கேட்டுக்கொண்டதற்கிணங்க செயற்குழுவில் எந்த கேள்வியும் எழுப்பாமல் வந்தேன். யாரைக்கண்டு பயந்தும் கேள்வி கேட்காமல் வர

வில்லை.

ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் மாதாந்திர கவனிப்பு இருப்பதால் எல்லோரும் அமைதியாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. நான் அமைச்சராக இருந்தபோது பெருந்துறையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டுவந்த சூதாட்ட கிளப்பை அகற்றி அங்கு பேரூராட்சி அலுவலகம் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதே பெருந்துறையில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பேட்டை பகுதியில் தற்போது சூதாட்ட கிளப் மற்றும் மதுபான பார் அமைத்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்ட சூப்பிரண்டை பொருத்தவரை மாவட்டத்தில் அனைத்து சூதாட்ட கிளப்புகளையும் மூட துடிப்பாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் இந்த விவகாரத்தில் போலீசாரின் கைகளை கட்டிப் போட்டது யார்? நாங்கள் குடிக்க தண்ணீர் கேட்கிறோம். எங்களுக்கு மதுக்கடை கொடுப்பதா என்று பொது மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ கூறினார்.

Related Stories: