மக்களவையின் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்பு; பதவி பிரமானம் செய்து வைத்தார் குடியரசு தலைவர்

புதுடெல்லி: மக்களவையின் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மோடி தலைமையிலான கூட்டணி அமைச்சரவை சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்நிலையில், 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜ எம்பி.யான வீரேந்திர குமார் (65), மக்களவை இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டது. இவர், மத்திய பிரதேசத்தில் உள்ள திகம்ஹார் தொகுதியில் இருந்து 7வது முறையாக வெற்றி பெற்று எம்பி. ஆனவர்.

இவர், முந்தைய மோடி அரசில் இணையமைச்சராக செயல்பட்டுள்ளார். இடைக்கால சபாநாயகராக  தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், புதிய மக்களவை கூட்டத்தொடரை தலைமை தாங்கி நடத்துவார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர், புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவார். இந்நிலையில் இன்று மக்களவையின் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories: