பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் 83 குழந்தைகள் பலி: தலா 4 லட்சம் நிவாரணம்

முசாபர்பூர்: பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின்  எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூரில்  கடந்த 1ம் தேதி முதல் கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும்  மருத்துவமனையில் 197 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 91  குழந்தைகளும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக   அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 83 குழந்தைகள் உயிரிழந்தனர்.  கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 69 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 14 குழந்தைகளும் இறந்தனர். முசாபர்பூர், வைஷாலி, மற்றும்  மேற்கு சாம்பரன் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள குழந்தைகள்  மூளைக் காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

மாநில  சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, மத்திய சுகாதாரத் துறை  அமைச்சர் ஹர்ஷ்  வரதன் ஆகியோர் நேற்று முசாபர்பூருக்கு சென்று ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது  ஹர்ஷ்  வரதன்  கூறுகையில், ‘‘மாநில அரசுக்கு  தேவையான  அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும். இந்த சம்பவம் குறித்து  மாவட்ட நிர்வாகம்,  சுகாதாரத் துறை மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை  நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றார்.இது குறித்து மாநில முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த  குழந்தைகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு  தலா ₹4 லட்சம் நிவாரணம்  வழங்கப்படும்,’ என கூறியுள்ளார்.

Related Stories: